Thursday, April 3, 2014

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - பகுதி 5






வேற்றுக்கிரகத்தில் வசிக்கும் மனிதன் ஒருவன், அங்கே கடும்தவம் புரிகிறான். அவன் எதிரே காட்சி அளிக்கிறார், கடவுள். ‘பூலோகத்தில் சில காலம் வசிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால ஆசை. அதற்கு அனுமதி அளித்து, பெருந்துணை புரிய வேண்டும்’ என வரம் கேட்கிறான், அவன். ‘பூலோகத்தில் வசிக்கும் மக்களுக்கு, எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன்’ என சத்தியம் செய்து கொடுத்தால், இப்போதே உன் ஆசை நிறைவேற்றப்படும்’ என்கிறார், கடவுள்.

‘நான் மனதளவில்கூட, யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டேன். எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தால், அப்போதே என்னை நீங்கள் அழித்து விடலாம்’ என்று உறுதியளித்து, அந்த ஒப்பந்தத்தோடு பூலோகம் வருகிறான், வேற்றுக்கிரகவாசி.

பூலோகத்தில் உள்ள மக்கள், ஆரவாரத்தோடு வரவேற்கிறார் கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிறான். முடிந்த உதவிகளைச் செய்கிறான். 6 மாதங்கள் கடந்தன. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. நட்பு தொடர் கிறது. இந்நிலையில், அங்குள்ள மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை மங்கி, கண்கள் குருடாகின்றன. பலர், மூச்சுத்திணறலுக்கு ஆளாகி, மரணத்தைத் தழுவுகிறார்கள். ஊரே சோகத்தில் உறைகிறது.

‘என்ன காரணம்?’ என மருத்துவர் குழு ஆய்வு செய்யும்போது… வேற்றுக்கிரகத்து மனிதனின் கண்களில் உள்ள ஒரு மெல்லிய ஒளிக்கீற்றினைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அவனுடைய சுவாசக்காற்றை ஆய்வு செய்தவர் கள், அதிர்ச்சியில் உறைகிறார்கள். இவனுடைய பார்வையும் சுவாசமும்தான் ஊர்மக்களைப் பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள். இதனால், அவன் மீது கடவுள் கடும்கோபம் கொள்கிறார்.

‘என் கண்களின் இயல்பு இது… சுவாசத்தின் இயல்பும் இதுதான். நான் யாருக்கும் தீங்கு நினைத்தால்தான் என்னை நீங்கள் அழிக்க முடியும். இதுதான் ஒப்பந்தம்’ என கடவுளின் வாயை அடைத்துவிட்டு, பூலோகத்திலேயே இருந்து விட்டான் அவன். பதறிப்போன கடவுளால், அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

இந்தக் கதைதான் நாடு முழுக்கவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

‘நம்முடைய அரசாங்கமே மக்களை அழிக்க நினைக்குமா? பெரிய அளவுல முதலீடு செஞ்சு, அரசே ஒரு திட்டத்தைக் கொண்டு வருதுனா, கண்டிப்பா அதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது’

- இப்படி அப்பாவித்தனமாக என்னிடம் கேட்பவர்களுக்கு… இந்தக் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

‘சரி, மக்களை அழிக்க வேண்டும்’ என்ற நோக்கத்தோடுதான் மீத்தேன், நிலக்கரி, பெட்ரோல்-கேஸ் எடுக்கும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றனவா?’ என்று கேட்டால்… நேரடியாக ‘ஆம்’ என்று பதில் சொல்லிவிட முடியாது. அது விவாதத்துக்குரிய விஷயம். அதேசமயம் இத்திட்டங்களால் உருவாகும் விளைவுகள்… பயங்கரமானவை என்பது மட்டும் நிதர்சனம். அதை யாராலும் மறுக்க முடியாது.

‘நூறு பேர் வாழறதுக்காக, நாலு பேர் உயிரை விட்டா தப்பில்லையே!’ என்று நியாயம் பேசுபவர்களும் இங்கே இருப் பார்கள். ஆனால், இங்கே நடப்பது… நான்கு பேர் வாழ்வதற்காக நூறு பேரைக் கொல்லும் வேலைதான் என்பதை அனைவருமே உணர வேண்டும். ஆம், வளம்கொழித்துக் கொண்டிருக்கும் விவசாய பூமியை நம்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சம் மக்களையும்… அவர்களின் வாழ் வாதாரங்களையும் இந்தத் திட்டம் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது என்பதில் ஐயமேதும் இல்லை.

‘கடலில் அலைகள் சீறுவதும், எரிமலையில் தீப்பிளம்புகள் ஊற்றெடுப்பதும் எப்படி இயல்போ… அதேபோல இப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டும்போது… சுற்றுச்சூழல் மாசுபடுவது, மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவது, உச்சபட்சமாக மனித உயிர்களுக்கு உலை வைப்பது எல்லாமே இயல்பு’தான் என்று சொல்லுமளவுக்கு எதிர் விளைவுகள் மோசமாகவே இருப்பதுதான் நம்முடைய அனுபவங்கள்!

திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி, கமலாபுரம், அடியக்கமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் அமைந்திருக்கும் விளை நிலங்களில்…. ஊரையே விழுங்கும் ராட்சத அனகோண்டா பாம்புகளாக, பெட்ரொல்-கேஸ் குழாய்கள் ஊர்ந்து செல்கின்றன. ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள இக்குழாய்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அத்தனை எளிதான காரியமல்ல. இக்குழாய்களைக் கண்டு மக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ”பாதுகாப்பற்ற முறையில் பல இடங்களில் இக்குழாய்கள் வயல்கள் மற்றும் சாலைகளுக்கு மேலேயே செல்கின்றன. இதைப் பற்றியெல்லாம் அந்நிறுவன அதிகாரிகள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை” என கொந்தளிக் கிறார்கள், இப்பகுதி மக்கள். ‘இந்தக் குழாய்களில் இருந்து, எப்போது வேண்டுமானாலும் கசிவு ஏற்பட்டு, உயிர்களுக்கு உலை வைக்கக்கூடும்’ என்ற பயத்தோடுதான் நட மாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக ஏற்கெனவே நிகழ்ந்துள்ள சில சம்பவங்கள் நம்மை மிரட்சியில் உறைய வைக்கின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு… அதிகாலைப் பொழுதில் பயங்கரச் சத்தத்துடன் பெரும் வெடிச்சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி, மக்களைக் குலைநடுங்க வைத்தது. உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் ஆனந்தராஜ், அந்தக் கொடூரமான நெருப்பில் சிக்கி, உடல் கருகி உயிர் இழந்திருக்கிறான். அதைப் பற்றி பேச்செடுத்தாலே… ”அய்யய்யோ… அந்தக் கொடுமையைக் கேக்காதீங்க” என தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார், ஆனந்தராஜின் அக்கா கீதா. அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.

”ரத்தமும் சதையுமா அவன் கிடந்ததைப் பார்த்து, எங்களுக்கு நெஞ்சே வெடிச்சுடுச்சு. அவன் உடம்புல ஒரு இடத்துலகூட, தோல் முழுசா இல்லை. அவன் பட்ட வேதனையை வார்த்தை யால சொல்ல முடியல. துடி துடிச்சி, ஊசலாடி உயிர் போச்சு” என கதறி அழுதார் தாய் லெட்சுமி.

ஆட்டிப்படைக்கும் ஏழ்மை யினாலும், வதைத்தெடுக்கும் உடல் உபாதைகளாலும் பரிதாப மாகத் தோற்றமளிக்கும் தந்தை பக்கிரிசாமி, ”எங்களுக்கு அவன் தான் ஒரே ஆண் வாரிசு. நான் கூலி வேலைக்குப் போயி படாதபாடுபட்டு, ரெண்டு பொண்ணுங் கள கல்யாணம் பண்ணி கொடுத்தேன்.

ஆனந்த் வளர்ந்து, வேலைக்குப் போயிட்டா கஷ்ட மெல்லாம் தீர்ந்துடும்… கவலை இல்லாம காலத்தைக் கழிக்க லாம்னு நம்பிக்கையோடு இருந் தோம். எல்லாம் போச்சு. இப்ப என்னால வேலைக்குப் போக முடியல. என்னோட இரண்டு கால்லயுமே ஆணிக்கால் நோய் பாதிச்சுருக்கு. மனைவிக்கும் பலவீனமான உடல்நிலை. அதோடதான் கூலி வேலைக்குப் போயி, குடும்பத்தைக் காப்பாத்திக் கிட்டு இருக்கு. ஆனந்தராஜ் இறந்துபோனதுக் காக, ஒ.என்.ஜி.சி-காரங்க ஒண்ணரை லட்ச ரூபாய நஷ்டஈடு கொடுத்தாங்க. இது ரொம்ப குறைவான தொகைனு ஊர் மக்கள் பிரச்னை செஞ்சதால, மாசம் நாலாயிரம் ரூபாய் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டப் பட்டுதான் காலத்தை ஓட்டிட்டிருக்கோம். இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுங்கனு அதிகாரிகள்கிட்ட கேக்கப்போனேன். கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளி, அவமானப்படுத்திட்டாங்க” என நொறுங்கி அழுததைப் பார்க்க பொறுக்கவில்லை எனக்கு.

இதே கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சேதுபதி, நெருப்பில் சிக்கியதில் உடல் முழுவதும் உருக்குலைந்து, கரிக்கட்டையாகிவிட… மிச்சமிருக்கும் உயிரோடு நடைபிணமாகி நிற்கிறான். உடல் எங்கும் தீக்காயத் தழும்புகள். காதுகள் முழுவதுமாக தீயில் கருகியதால், அந்தப் பகுதியே வெற்றிடமாக இருக்கும் சேதுபதியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

”அப்ப நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தேன். நானும், ஆனந்தராஜூம் டாய்லெட் போறதுக்காக, வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கினோம். கொஞ்ச நேரத்துல, அங்க இருக்கிற குழாய்ல இருந்து வெடிச் சத்தத்தோடு, நெருப்புப் புடிச்சி, எங்க உடம்பு முழுக்க எரிய ஆரம்பிச் சிடுச்சு. பாவம், அவன் செத்துப்போயிட்டான். நான், ஆறு மாசம் வரைக்கும் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதுக்குப் பிறகு கூட, உடம்பு முழுக்க புண்ணாதான் இருந்துச்சு. பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சும் கூட, என்னால மத்தவங்க மாதிரி வர முடியல…”

-சேதுபதி சொல்லச் சொல்ல… என் கண்களில் நீர்த்துளிகள்.

”என்னோட மருத்துவ சிகிச்சை செலவுகளை ஒ.என்ஜி.சி. ஏத்துக்கிச்சு. ஆனா, நஷ்டஈடா மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கொடுத்துக்கிட்டு இருக்காங்க” என்று சொல்லும் சேதுபதி, தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர். ஆனால், ‘இதே தோற்றத்தோடு எப்படி கல்லூரிக்குச் செல்லப் போகிறோம்?’ என்கிற கவலை, இப்போது சேதுபதியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!

நன்றி விகடன்


Tuesday, March 18, 2014

காணொளி: நீரியல் விரிசல் (Hydraulic fracturing 3D Animation -Video) முறை...




நீரியல் விரிசல் முறையில் (hydraulic fracking) எடுக்கபடும் மீத்தேன் எரிவாயு அது கண்டறியப்பட்டுள்ள இடத்தை சுற்றிலும் துளையிட்டு எடுக்கப்படுகிறது.ஆனால் நிலக்கரி படுகை மீத்தேன் (coal bed methane)எவ்வாறு எடுக்கபடுகிறது என்பதில்தான் அதில் மறைந்துள்ள ஆபத்து என்பது எவ்வளவு அபாயகரமானது என் நினைக்கும்போது நாம்மால் நிம்மதியாக இருக்க முடியாது.

மீத்தேன் எடுக்கப்படும் இடத்தில்(site) துளையிட்டு (fracking)ஒரு இடத்தில் மட்டுமல்லாதுஅந்த ஒருதுளையின் வழியாக பூமிக்கு அடியில் சுமார் 1 முதல் 5 கிலோமிட்டர் வரை பக்கவாட்டில்(Horizontal)பலதுளையிட்டு மீத்தேன் படிந்து இருக்கும் நிலக்கரிபாறைகளை நுண் துளையிட்டு மீத்தேன் வாயு வெளியே எடுக்கப்படும்.

எங்கோ ஒரு இடத்தில் துளையிட்டு எடுக்கிறார்கள் என்று நினைத்தால் நம் நிலத்தின் அடியில் உள்ள நீர் நமக்கு தெரியாமல் உறிஞ்சப்படும்.தஞ்சை காவேரி டெல்டாவில் முதற்கட்டமாக சுமார் 50 இடங்களில் மீத்தேன் கிண்று(methane wells)தோண்ட திட்டமிடுள்ளனர்.

அது படிப்படியாக சுமார் 2000 வரை அமைக்கப்படும்.நினைத்துபாருங்கள் நம் தண்ணிர் முழுவதும் உறிஞ்சப்பட்டு நம் பாலைவனமாக என்பதில் சந்தேகமில்லை.

நம் மண்ணை இந்த பேராபத்தில் இருந்து காக்க கரம் கோர்ப்போம்.

Courtesy: http://www.trialexhibitsinc.com/hydrualic-fracturing.php

.....

Wednesday, March 12, 2014

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா போராட்டம் - பகுதி 3 - விகடன்


மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா போராட்டம் - பகுதி 3

'கால் செருப்புக்கு தோல் வேண்டின்...
செல்வக் குழந்தையைக் கொல்வாரோ!
கண்ணிரண்டும் விற்று,
சித்திரம் பெற்றால்...
கைகொட்டி சிரியாரோ?'

-வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு, வேட்டு வைக்கக்கூடிய வீழ்ச்சித் திட்டங்களாக இந்த அரசுகள் கையில் எடுப்பதை நினைக்கும்போது, மகாகவி பாரதியின் இந்தப் பாடல் வரிகள்தான் என் நெஞ்சுக்குள்ளே முட்டி மோதுகின்றன.

இந்திய அரசின், 'எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கோரத் தாண்டவத்தால், திரூவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராம மக்கள் சந்திக்கும் துயரங்கள்... எழுத்துக்களுக்குள் அடக்கிவிட முடியாதவை. அவர்களின் சோகக் கதை, பெட்ரோலுக்கும் மேலாகப் பொங்கி வெளிவந்தபடியேதான் இருக்கின்றன!

சுவாசிக்கச் சுத்தமான காற்று இல்லை; குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்களும் கையில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக, 'எந்த நேரத்திலும் நச்சுவாயு வெளியாகலாம் என்கிற அச்சத்தோடு... நித்தமும் நிச்சயமற்ற வாழ்க்கைதான் எங்களுடையது' என்று விரக்தியின் உச்சத்தில் நின்றபடி சொல்லும் அந்த மக்களின் கண்ணீர்... கழகங்களையோ, காங்கிரஸையோ, காவிகளையோ... ஏன் கம்யூனிஸ்டுகளைக்கூட இதுவரை எட்டவில்லை!

ஓ.என்.ஜி.சி.-யின் சேமிப்பு நிலையம், கெயில் நிறுவனத்தின் கேஸ் பிரிக்கும் நிலையம் மட்டு மல்லாமல்... தனியாருக்குச் சொந்தமான மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பலவும் வெள்ளக்குடியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கெயில் நிறுவனத்தின் மூலமாக மிகக்குறைவான விலையில் இங்கு எரிவாயு கிடைப்பதால், சிலிகேட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பாய்லர்களுக்கான சுடுகற்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் செயல்படுகின்றன. இவை யெல்லாம் திறந்தவெளியில் ரசாயனங் களைக் குவித்து வைத்துள்ளன. காற்றில் கலந்து, சுற்றுவட்டாரப் பகுதி முழுக்க அவை படர்கின்றன.

தொழிற்சாலைகளின் கழிவுகளும்கூட இந்த மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக்கட்டத் தவறவில்லை. வெட்டவெளியில், குறிப்பாக விளைநிலங்களிலும் நீர்நிலைகளிலும் ஆலைக் கழிவுகள் கொட்டப்படும் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?


பட்டுப்போன தென்னை மரங்களைச் சுட்டிக்காட்டும் மக்கள், ''இப்படிப்பட்ட அநியாயத்தால, எங்க ஊரு மண்ணும் தண்ணியும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு இந்த தென்னை மரங்கள்தான் சாட்சி'' என வேதனையில் விம்முகிறார்கள்.

ஓ.என்.ஜி.சி.-யால் உருவெடுத்துள்ள பாதிப்புகள் வெள்ளக்குடி கிராமத்தோடு மட்டும் முடிந்துவிடவில்லை. இதன் கோரக் கரங்கள், சுற்றியுள்ள கிராமங்களின் கழுத்தையும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன. கமலாபுரம், வடுவக்குடி, ஒட்டநாச்சியார்குடி சிங்களாஞ்சேரி, தேவர்கண்டநல்லூர், பெருங்குடி, கட்டையந்தோப்பு, சாருவன், மூலக்குடி, எருக்காட்டூர், கொட்டாராக்குடி, பூந்தாளங்குடி, வேளுக்குடி, தாழைக்குடி... என அந்தக் கிராமங்களிலும் பயணித்தோம். இங்கெல்லாம் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட எண்ணெய்-எரிவாயுக் கிண்றுகள் படுபிர மாண்டமாக மிரட்டுகின்றன.

இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும்... ஓ.என்.ஜி.சி-யில் பணியாற்றும் அனைவருமே கூட சாட்சிகள்தான்! ஆனால், அங்கே பணியிலிருப்பதால் யாருமே வாய்திறக்க முடியாத நிலை. என்றாலும், உயர்அலுவலர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர், மனிதநேயத்தோடு சில முக்கியமான தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.


''சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல், கேஸ் எடுக்கும் நிறுவனங்களுக்கு நான் போயிருக்கிறேன். அங்கு, 25 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் குடியிருப்புகள் இல்லாத, பாலைவனப் பகுதிகளில்தான் பெட்ரோல், கேஸ் கிணறுகள் அமைத்துள்ளனர். கிணறு களில் இருந்து மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன் வாயுக்களோடு... ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவும் வெளியில் வரும். இது மிகவும் ஆபத்தான நச்சுவாயு. குறைவான விகிதாசாரத்தில் இருந்தால், காஸ்டிக் சோடாவைக் கலந்து எரித்து விடுவார்கள். ஹைட்ரஜன்-சல்ஃபைடு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காற்றில் பயணம் செய்தால்தான் அதன் கடினத்தன்மை குறையும். இதை சுவாசித்தால், கண்டிப்பாக சுவாச நோய்கள் உருவாகும். இக்காற்று, மனிதர்கள் மீது படர்ந்தால்... தோல் வியாதிகள் உருவாகும். மண்ணில் படர்ந்தால், நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதனால்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவை எரிப்பதில்லை. ஆனால், இங்கு வெள்ளக்குடி, அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே, அதுவும் விளைநிலங்கள் உள்ள பகுதிகளிலேயே ஹைட்ரஜன்-சல்பைடு எரிக்கப்படுகிறது. பெட்ரோல்-கேஸ் கிண்றுகளில் எந்த நேரத் திலும் மிக அதிக அளவில் ஹைட்ரஜன்- சல்ஃபைடு வாயு வெளிவரக்கூடிய வாய்ப்பு கள் அதிகம். அதுபோல் வந்தால், கட்டுப் படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல.


இந்த எண்ணெய் கிணறுகளில், கேஸ், கச்சா எண்ணெய், கடினத் தன்மையுள்ள உப்பு நீர் எல்லாம் கலந்திருக்கும். இந்த உப்பு நீர், கடல் நீரை விட 10 மடங்கு அதிகம் உப்புத் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இதனை முறையாக சுத்திகரித்து அப்புறப் படுத்துகிறார்கள்.

இங்கு...

வெட்டவெளியிலேயே, விளைநிலங்களிலேயே கொட்டப்படுகிறது. பெட்ரோல்-எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படும்போது, குழாய்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, ரசாயனம் கலந்த தண்ணீர் உள்ளே செலுத்தப்படும். இது உள்ளே இருக்கும் இடிபாடுகளை வெளியில் கொண்டு வரும். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த ரசாயன தண்ணீரும் விளைநிலங்களைப் பாழ்படுத்தக்கூடியது. இதுவும் இங்கேயே கொட்டப்படுகிறது. இந்தக் கிணறுகளை சுத்தம் செய்ய, ஆசிட் சர்குலேஷன் செய்யப்படுகிறது. இந்த அமிலங்களும் முறையாக அப்புறப்படுத்தப் படுவதில்லை'' என்று அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக... அடிவயிறு பற்றி எரிந்தது எனக்கு!

அத்தனையும் உண்மைதான் என்பதற்கு ஏதாவது சாட்சி? ஆம் நிறையவே...

கிராமத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு சிறுவன்... உடல் உருக்குலைந்து நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்... மரணத்தைத் தழுவிய விளைநிலங்கள்... வெடிகுண்டு சோதனையால் அதிர்ந்து கிடக்கும் கிராமங்கள்... என நிறையவே இருக்கின்றன!

நன்றி: விகடன்

...

Thursday, March 6, 2014

காவிரி படுகை மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம்! நெற்களஞ்சியத்தை கவ்வ வரும் பேரபாயம்! பேரழிவு!!






காவேரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் பற்றிய சிறப்பு விவாதம் . அனைவரும் பார்த்து திட்டத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளுங்கள். இது தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை.

- Dr. G Nammalvar, Organic Agriculturist

http://www.youtube.com/watch?v=bQ2rbIlFcd0

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சார்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 766 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து இருக்கும் மீத்தேன் வாயு

Coal Field: Thanjavur & Thiruvarur District

Block Name: MG-CBM-2008/IV

Area (sq km): 766

காவேரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம். தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்’ என போற்றப்படும் தஞ்சாவூரில் சுமார் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று காலங்களில் நெல் மட்டுமே பிரதான விளைச்சலாக இருந்து வருகின்றது.

டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் தொழில் ஒருபுறம் கொடிகட்டிப் பறக்கிறது. இப்போது அடுத்த ஆபத்து தனியார் நிறுவனத்தால் உருவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இதற்காக மன்னார்குடி பகுதியை ஜூன் 2010 தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்ட கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் (Great Eastern Energy corporation Limited - GEECL) என்ற தனியார் நிறுவனம் 26.08.2010 அன்று மத்திய அரசுடன் உற்பத்தி பகிர்மான ஒப்பந்தம் செய்து கொண்டு, 04.01.2011 அன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திட்ட செயலாக்கம் குறித்து 24.05.2011 அன்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 23.01.2012 அன்று மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் நலினா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தன. எனினும் அக்கூட்டத்தின் அறிக்கையைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 12.09.2012 அன்று இத்திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கிவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய வட்டங்களிலும் 24 சதுர கி.மீ. பரப்பளவில் பழுப்பு நிலக்கரியும், எஞ்சிய 667 சதுர கி.மீ. (1,66,210 ஏக்கர்) பரப்பளவில் மீத்தேன் வாயுவும் என மொத்தம் 691 சதுர கிலோமீட்டரில் எடுக்க கிரேட் ஈஸ்டெர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பாகூர் பகுதியில் 766 மில்லியன் டன். நெய்வேலி, ஜயம் கொண்டான், வீராணம் பகுதியில் 6835 மில்லியன் டன். மன்னார்குடி பகுதியில் 19,788 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடி என்று கூறப்படுகின்றது.

முதற்கட்டவேலையாக தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாருர் மாவட்டதில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்க வேண்டும்.

கும்பகோணம் வட்டத்தில் கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில், திருவிடைமருதூர் வட்டத்தில் மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை, ஒரத்தநாடு வட்டத்தில் குலமங்கலம், குடவாசல் வட்டத்தில் சித்தாடி, குடவாசல், மேலைப்பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், வலங்கைமான் வட்டத்தில் சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கொயில்வெண்ணி, ஆதனூர், கண்டியூர், நீடாமங்கலம் வட்டத்தில் பூவனூர், கீழவாந்தச்சேரி(தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல்,காளாச்சேரி, மன்னார்குடி வட்டத்தில் கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு ஆகிய கிராமங்களில் 88 கிணறுகள் சோதனை அடிப்படையில் அமைக்கப்படும்.

இப்படி அமைக்கப்படும் கிணறுகளில் இருந்து நிலக்கரிப் படிமத்தில், அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கின்ற, அதாவது தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்ற படிமங்களை எடுப்பார்கள்.

ஆய்வின் திட்ட செயலாக்க அறிக்கையின் படி முதல் கட்டமாக ஐயாயிரம் கோடி செலவில் 19,500 மில்லியன் டன்மீத்தேன் உறிஞ்சி எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது, அதில் லிக்னைட் 40 முதல் 50 சதமும், கரியமில வாயு 17 முதல் 20 சதமும், சாம்பல் 4 முதல் 12 சதமும், எளிதில் ஆவியாகின்ற பொருட்கள் 18 முதல் 23 சதமும் இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி விட்டுத்தான் மீத்தேன் எடுக்க முடியும்.

இதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்க உள்ள நிலையில்தான் விவசாயிகளிடையே எதிர்ப்புகளும் வலுத்துள்ளது.

”மீத்தேன் எடுப்பதற்காக வெளியேற்றப்படும் நீர் நச்சு கலந்து வெளியேறும். அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள். நிலத்தடியில் இருந்த நீரையும், வாய்க்கால், ஆறு, குளம், ஓடைகளில் உள்ள நீரையும் நச்சு நீராக மாற்றி விடும்” என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில், வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடத்தின் 10 கி.மீ. சுற்றளவில் 4 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.

”பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின்” அமைப்பாளர் லெனின் மற்றும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவருமான பொறியாளர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர், “இத்திட்டத்தின்படி மீத்தேன்எடுப்பதற்கு நிலக்கரிப்பாறையின் மேல்மட்டத்தில் உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்ற வேண்டும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். அப்போதுதான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்று விடும்.

வெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டதாக இருக்கும். கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இருக்கும். குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், மர்றும் பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் 80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாள் ஒன்றுக்கு சுமார் 20000 கேலன் ( 75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

ஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவு நீரின் தாக்கம். இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும். இந்த திட்டத்தால் வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்” என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

காவிரி சமவெளி பாதுகாப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் என். குணசேகரன், ”மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. ஆனால், அதை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும்,மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும், இது பசுமைத் திட்டம் எனவும் தனியார் நிறுவனம் விளம்பரம் செய்கிறது. நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டுபோகும். அருகிலுள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். இதனால், காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றவையும் நிகழக்கூடிய அபாயம் உண்டு. ஆபத்தான, நாசத்தை விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்தால் பேரிடர், பேரழிப்புக்கு தமிழகத்தை உள்ளாக்கும்” என்கின்றார். இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் பலமாக எதிரொலிக்கின்றது.

மேலும் இதில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களும் சேர்ந்து முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 35 ஆண்டுகள் மீத்தேன் வாயு நிலக்கரியை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக கிரோட் ஈஸ்டர் எனர்ஜி Great Eastern Energy Corporation Ltd (GEECL) என்ற நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து உள்ளது. மீத்தேன் வாயு நிலக்கரி எடுப்பதும் மூலம் பல லட்சம் கோடி சம்பாதிக்க உள்ளது.

இதனால் விவசாய விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். கடல் நீரை விட 5 மடங்கு உப்பு தன்மை கொண்டது. குடிக்க கூட தண்ணீர் நம் நாட்டில் இருக்காது.

மாசு கட்டுப்பாடு தொடர்ந்து ஏற்பட்டு விடும். விவசாய விளை நிலங்களின் விளைச்சல்கள் முற்றிலும் அழிந்துவிடும். கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு செல்கிறது. சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் மீத்தேன் வாயு திட்டத்தால் அழிந்து நாசமாகி விடும்.

கூட்டு குடிநீர் திட்டத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கூட காவிரி நீரை தான் குடி நீராக நாம் பயன்படுத்தி வருகிறோம். காவிரி நீர் சென்னையில் உள்ள வீரானம் ஏரிவரை செல்கிறது. சென்னையில் உள்ள மக்களுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

மீத்தேன் வாயு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். காவிரி நெல் விளையும் பரப்பு. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகம் நிலக்கரி சுரங்கமாக மாறிவிடும். சாப்பாடு கிடைக்காது, குடிக்க தண்ணீர் கிடைக்காது. இவை இரண்டுக்கும் தமிழ்நாடு அடுத்த மாநிலத்தில் தான் கையேந்தும் நிலை வந்துவிடும்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியாவில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப்படுகின்றது.

இதனிடையே மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலம் உள்வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன என்கின்ற செய்திகள் மக்களிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

To save Cauvery delta areas from chances of sea water intrusion, with Rs15 billion World Bank aid

Chemicals used to extract coal bed methane are toxic, soluble in water and have Radiation

Chances of Sea Water entering farming lands in Cauvery Delta areas due to Climate Change in the future

Please do not ignore : You can help saving 3.45 Lakh Hectares of Agricultural Lands

There is a Project all set to commence in Mannargudi Area, (Thanjavur) Tamil Nadu, India to extract Coal Bed Methane.

What is it? Please look

Which will have its impact on 3.45 lakh hectares (3450 Sq. Km) of agricultural land here, as per the proposed project. Our Place is called Rice Bowl of Tamil Nadu.

Well these beautiful landscapes are already dying and may disappear because of this CBM extraction Project.

Help us save our nature. We are sure of one thing once methane is extracted then the lignite here will be the target for the fuel/energy eaters. We do not go with feeding our people with coal by killing the agriculture.

Please share this with your friends if you are unaware of this subject your friend or friend of friend may help us.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு மிக முக்கிய காரணம்மீத்தேன் வாயுவிற்காக தோண்டப்படும் கிணறுகள்தான் என்பது தெரிய வந்துள்ளது

http://rt.com/usa/fracking-texas-activists-concerned-510/

இது அமெரிக்காவில் மீத்தேன் கிணறுகள் உள்ள பகுதியின் படம் .நெல் விளையும் நம் தாய் மண் இப்படியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுகொண்டு இருக்கிறது.கைகோர்ப்போம். தாய் பூமியைக் காப்போம்.

Oops. Methane Leakage from Fracked Wells “Alarmingly high..”

http://climatecrocks.com/2013/08/07/oops-methane-leakage-from-fracked-wells-alarmingly-high/

...

மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்! - பகுதி 2 - விகடன்













பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு. கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன. மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன? மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு! பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன. காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும். இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்! உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது! அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது. கீழே உள்ள படங்களை பார்க்க அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர். நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது! மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது... ''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார். ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது. காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு? இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு. ''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், 35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம். மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.

குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்! தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்? இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்! ''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார். ''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர். கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை. கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம் ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது! கூடங்குளம் தரும் படிப்பினை! சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம். இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார். கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன? மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும். கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!

நன்றி: www.vikatan.com


...

மீத்தேன் எமன்! பாலைவனமாகும் பரிதாப டெல்டா - பகுதி 1 - விகடன்


அந்தத் தெருவில், பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அதை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்தார், வீட்டுக்காரர். அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டியபோது, செப்புக் குடம் ஒன்று கிடைத்தது. அதில் தங்கக் காசுகள், வெள்ளி ஆபரணங்கள் தகதகத்தன. இந்தத் தகவல், அந்தத் தெரு முழுவதும் பரவியது.

பக்கத்து வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒகு. ராமகிருஷ்ணன்ருவன், 'இங்கேயும் கண்டிப்பாக புதையல் இருக்கும்... தோண்டிப் பார்க்கலாம்’ என்று நினைத்தான். இரவோடு இரவாக அந்த வீடு முழுக்க ஆழமான குழிகளைத் தோண்டி, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஒட்டம் எடுத்தான். மறுநாள் கனமழை... ஆங்காங்கே குழியெடுக்கப்பட்டதால் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டம் கண்டு, ஒட்டுமொத்த வீடும் இடிந்து... அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டாவின் நிலையும் இப்படித்தான் மாறும். எது எங்கு சாத்தியமோ, அதை அங்குதான் செய்ய வேண்டும். எதுவும் விளையாத பாலைவனப் பகுதிகளில் பெட்ரோல், கேஸ் எடுக்கிறார்கள் சரி. ஆனால், முப்போகம் விளையும் செழிப்பான விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம், 'எண்ணெய் எடுக்கிறேன்...', 'மீத்தேன் எடுக்கிறேன்' எனச் செய்யப்படும் விஷப்பரீட்சைகளை மூடத்தனம் என்பதா? இல்லை, 'இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது. அழியப்போவது யாரோதானே...' என்ற எண்ணத்தில் நடைபோடும் ஆட்சியாளர்களின் அரக்கத்தனம் என்பதா?

நாளைக்கு எடுக்கப்பட இருக்கும் மீத்தேன் ஆபத்துக்கு ஒரு சோறு பதமே... கடந்த இருபது, ஆண்டுகளுக்கும் மேலாக இதே டெல்டா பகுதியில், 'பெட்ரோல் எடுக்கிறோம்' என்கிற பெயரில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம்), நடத்திக் கொண்டிருக்கும் அழிவு வேலைகள்!

திருவாரூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது... வெள்ளக்குடி கிராமம். பாண்டவை ஆற்றின் கிளை வாய்க்கால்களால் பாசனம் பெறும் இந்த ஊர், ஒரு காலத்தில் மிகமிக செழிப்பான விவசாய பூமி. வளம் மிக்க வண்டல் மண் பூமி என்பதோடு, 10 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் தவழ, ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து, பொருளாதாரத்தில் தன்னிறைவோடு திகழ்ந்தனர், விவசாயிகள். 80-களின் இறுதி வரை நீடித்த இந்த நிலை... 90-களின் தொடக்கத்தில் தலைகீழாக மாறிப்போனது... பெருங்கொடுமை! ஆம்... ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அப்போதுதான் இங்கே அடியெடுத்து வைத்தது.

அதன் கோர முகத்தை, அப்போது உணராத டெல்டா வாழ் விவசாயிகள், விவசாயக் கூலிகள் என அனைவருமே... 'நம்ம ஊர்ல பெட்ரோல் எடுக்கப் போறாங்களாம்... துபாய், குவைத் மாதிரி நம்ம ஊரும் உலகம் முழுக்க ஃபேமஸாகி, பணக்கார ஊராயிடும். வழவழப்பான விசாலமான ரோடெல்லாம் வந்துடும். ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைச்சுடும்’ என்றெல்லாம் வெள்ளந்தியாகவே பேசிக் கொண்டிருந்தனர். மீடியாக்களிலும், 'காவிரி டெல்டாவில் பெட்ரோல் ஊற்று... ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெட்ரோல் பல ஆண்டுகளுக்குக் கிடைக்கும்... இதன் காரணமாக காவிரி டெல்டா முழுக்க தொழில்கள் பெருகும்' என்றே செய்திகள் பரப்பப்பட்டன!

அன்றைக்கு இதையெல்லாம் ஆச்சர்யமும்... பெருமையும் பொங்க உள்வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் வெள்ளக்குடி மக்கள். ஆனால், இன்று இந்தப் பசுமை பூமியின் நிலை... கொடுமையிலும் கொடுமை! நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து நம்மால் விலகவே முடியவில்லை.

ஒரே வரியில் சொன்னால்... 'நவீன சாலைகளைக் கொண்ட நரகம்தான் வெள்ளக்குடி'.

''ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சுக்கிட்டு இருக்கோம். ஓ.என்.ஜி.சி-யோட எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இங்கதான் இருக்கு. கேஸை தனியா பிரிக்கக்கூடிய சார்பு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனமும் இங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தேவைற்ற நச்சு வாயுக்கள் இருபத்தி நாலு மணிநேரமும் வெளியாகும். அதை அப்படியே எரிய விட்டுடுவாங்க. அதனால, ஆண்டு முழுக்க அணையா ஜோதியா அது எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதனால வர்ற புகை, கரித்துகள் எல்லாம் விளைநிலங்கள்ல படியுது. நீர்நிலைகளும் விஷமாயிடுச்சு. எண்ணெய்க் கழிவுகளை திறந்தவெளியில வயல்கள்ல கொட்டி வெச்சுருக்காங்க. 60 அடி சுற்றளவு

20 அடி ஆழத்துக்கு கிணறுகளை அமைச்சி, அதுலயும் நச்சுக்கழிவுகளைக் கொட்டி வெச்சுருக்காங்க. இந்த கிணறுகளோட பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைஞ்சு கிடக்கறதால, நச்சுக் கழிவுகள் மண்ணுல பரவி, ஊர் முழுக்க ஊடுருவியிடுச்சு.

மழை, வெள்ளக்காலங்கள்ல இந்த எண்ணெய்க் கழிவுகள் தண்ணீரோடு அடிச்சிக்கிட்டு வந்து, பரவலா எல்லா இடங்கள்லயும் வெளியில தேங்கிடுது. இதனால் இங்க உள்ள நிலங்கள்ல விளைச்சலே இல்லாம போயிடுச்சு. ஒருவேளை உயிர் புடிச்சி வந்தாலும், விதவிதமான நோய்கள் தாக்கி, பயிர்கள் செத்துடுது. அதனால, பெரும்பாலான நிலங்கள், தரிசாத்தான் கிடக்கு. விவசாயம் அழிஞ்சி போனதால, வெளியூர்களுக்கு கூலி வேலைக்குத்தான் நிறையபேர் போயிக்கிட்டு இருக்காங்க'' என்று சொல்லும் பரசுராமனின் வார்த்தைகள் முழுக்க... வருத்தம் இழையோடுகிறது!

''இந்த எண்ணெய் கம்பெனியால, நாங்க இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல...'' என பெருக்கெடுத்த கண்ணீரோடு, கதறி அழுத கமலா, ''மேய்ச்சலுக்குப் போற ஆடு, மாடுக கால்கள்ல, எண்ணெய்க் கழிவுகள் பட்டு, புண்ணாகி, இறந்துடுது. இந்தப் பகுதிகள்ல எப்பவும் எண்ணெய் வாடை, நச்சுப்புகை இதுங்களைத்தான் சுவாசிச்சுக்கிட்டு இருக்கோம். இதனால, ஏகப்பட்ட நோய்கள் எங்களுக்கு வருது. எப்பவுமே ஊருக்குள்ள வெப்பக் காத்துதான் வீசிட்டே இருக்கு. சின்னக் குழந்தைகள் எல்லாம் தாங்க முடியாம பலியாகுதுக.

குடிக்கக்கூட நல்ல தண்ணி கிடையாது. அடிபம்பு தண்ணியிலகூட எண்ணெய் வாடை அடிக்குது. இதையெல்லாம்விட பெரிய வேதனை... ஒ.என்.ஜி.சி கம்பெனிக்காரங்க, எங்க குடியிருப்புப் பகுதியை சுத்திலும் பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. 'ஏன் இதைக் கட்டறீங்க?'னு கேட்டதுக்கு, 'இங்க புதுசா ஃபேக்டரி வரப் போகுது'னு சொல்றாங்க. எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா கூட நாங்க தப்பிச்சி ஓட முடியாது. இங்க இருந்து சில அடி தூரத்துலதான் எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இருக்கு. 'எப்ப வேணும்னாலும் எது வேணுனாலும் நடக்கலாம்'னு இங்க உள்ள அதிகாரிகளே சொல்றாங்க'' என்று நடுங்கியவர்,

''அப்பப்ப ஒ.என்.ஜி.சி-யோட மீட்புப் படை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் அவசர அவசரமா இங்க ஓடி வந்து... 'விஷ வாயு கசிஞ்சுடுச்சி... இந்த சேமிப்பு நிலையம் வெடிக்கப் போகுது. சிக்கீரம் கிளம்புங்க’னு பதற்றமா சொல்லுவாங்க. நாங்க பயந்து, உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு, குழந்தை, குட்டிகளைத் தூக்கிக்கிட்டு, கையில கிடைக்குற சாமான்களோடு வெளியில ஓடுவோம். ரொம்ப நேரம் கழிச்சி, எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமே இல்லாம, 'பயிற்சிக்காக ஒத்திகை பார்த்தோம்’னு அதிகாரிக சொல்லுவாங்க. இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு.

எங்க மேல அக்கறை இருக்கற மாதிரி பேசற சில அதிகாரிகள், 'இங்க எப்ப வேணும்னாலும் பெரிய அளவுல ஆபத்துகள் ஏற்பட லாம். இங்க இருந்து நீங்க வேற இடத்துக்கு போறது நல்லது’னு சொல்றாங்க. அதை எந்த அளவுக்கு நம்பறதுனு தெரியல.

இது எங்களோட பட்டா நிலம். காலகாலமா, தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப எங்களோட வாழ்க்கை, நடைப்பிணமா நகர்ந்துக்கிட்டு இருக்கு'' என்று அழுதார், கமலா.

இங்குள்ள அத்தனை விவசாயிகளிடமும் இதுபோன்ற கதறல் கதைகளே நீக்கமற நிறைந்திருக்கின்றன.

Courtesy: http://www.vikatan.com/

...